கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக நடத்தப்பட்ட பிரம்மாண்ட விருந்து
இலங்கையில் முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் மகளுக்காக பெருந்தொகை செலவில் பாரிய விருந்து வைக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விருந்து வைபவம்
கடந்த 23ஆம் திகதி இரவு கொண்டாட்டம் மற்றும் விருந்து வைபவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்விற்காக அழகிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன், நிகழ்விற்கு சுமார் 150-200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
வைபவத்தின் முடிவில், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் இடதுபுறத்தில் அமைந்துள்ள ஹோட்டலுடன் கூடிய குடியிருப்பு வளாகத்தின் அறையில் மற்றொரு குழுவினர் மீண்டும் விருந்து நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.