ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட பணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் கையளித்த பணத்தை உடனடியாக நீதிமன்றில் கையளிக்குமாறு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்மிடம் 17.8 மில்லியன் ரூபாயை கையளித்ததாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
எனினும் பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் பணம் தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கோட்டை நீதவான் திலின கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த பணத்தை உடனடியாக நிதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பணம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரொக்கப்பிணையில் விடுதலை
இதேவேளை கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து அங்கிருந்த பணத்தை எண்ணியதாக கூறப்பட்ட நால்வரையும் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா ரொக்கப்பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மாளிகையில் 12 லட்சம் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்ளை |