தமது சகோதரருக்கு எதிரான வழக்கை மற்றுமொரு நீதிமன்றுக்கு மாற்றுமாறு நீதவான் கோரிக்கை
09 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கேட்டதாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உட்பட இரண்டு பேருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை வேறு நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றுமாறு கொழும்பு தலைமை நீதவான் திலின கமகே, நீதித்துறை சேவைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிவாதிகளில் ஒருவரான சலோச்சன கமகே தனது சகோதரர் என்பதால், இந்த இலஞ்ச ஒழிப்பு வழக்கின் விசாரணைகளை தனது நீதிமன்றம் தொடர்வது நலன் முரண்பாடு என்பதால், இந்த கோரிக்கையை முன்வைப்பதாக கொழும்பு தலைமை நீதவான் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், வழக்கு தொடர்பான விசாரணைகளைத் தொடர மற்றொரு பொருத்தமான நீதவானை நியமிக்குமாறும், அவர் நீதித்துறை சேவைகள் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இலஞ்சம்
இதேவேளை, கடந்த சனிக்கிழமை இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உட்பட இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை 2025 ஜனவரி 06 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரரின், உறவினர் ஒருவரது நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவதாக இந்த இலஞ்சம் கோரப்பட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |