கொழும்பில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் பெற சென்று உறங்கிய வர்த்தகருக்கு அதிர்ச்சி
கொழும்பு, நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
ATM இயந்திரம்
அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட விஜேராம சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஏ.டி.எம் இயந்திரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று அட்டையை இயந்திரத்தில் காட்டிய பின், பின் குறியீட்டை சரியாக உள்ளிட முடியாததால், அட்டை இயந்திரத்தில் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
திருடர்கள் கைவரிசை
அட்டை வெளியே வரும் வரை வர்த்தகர் காத்திருந்ததாகவும், தன்னையறியாமல் அங்கேயே உறங்கிவிட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் அதிகாலை 5.30 மணி வரை உறங்கியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண் முழித்து பார்த்த போது தனது 2 கையடக்க தொலைபேசிகளும் காணாமல் போயுள்ளது. வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளும் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் சீசீடீவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர். அங்கு இருவர் கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.