சீனா - பிலிப்பைன்ஸ் இடையே கப்பல்கள் மோதல்: மாலுமி காயம்
தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை மாலுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
'செகண்ட் தோமஸ் ஷோல்' எனப்படும் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பிலிப்பைன்ஸின் 'பிஆர்பி சியர்ரா மேட்ரே' இராணுவ முகாமுக்கு அருகே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த மோதலுக்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன. பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் கூற்றுப்படி, சீன கடலோரக் காவல் படைப் படகு தங்கள் பகுதியை அணுகி அச்சுறுத்தியதாகவும், மரத்தடியால் தாக்கியதில் தங்கள் மாலுமியின் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடும் கண்டனம்
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சீன கடலோரக் காவல் படை, பிலிப்பைன்ஸின் இரு படகுகள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தங்கள் ரோந்துப் படகை முதலில் மோதியதாகத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி, 'செகண்ட் தோமஸ் ஷோல்' பகுதி பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்திருந்த போதிலும், அப்பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கோரி வருகிறது.

தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்காக மணிலாவில் கூடியுள்ள வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் பிராந்திய அமைதியைக் குலைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.