தமிழ் தேசியத்தின் பெயரால் இடம்பெறும் முறைகேடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்: டக்ளஸ் ஆதங்கம்
அதிபர் இராசதுரையை தமிழ் தேசியத்தின் பெயரால் கொன்றொழித்து அகற்றியது போல் அதிபர் இந்திரகுமாரை பெண்ணியத்தின் பெயராலும் சாதியத்தின் பெயராலும் உயிருடனே அகற்ற முற்படும் செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்பதற்காக எனது அரசியல் அதிகாரங்களை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை - பயன்படுத்தப் போவதுமில்லை எனவும் கூறியுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியம் என்ற ஒற்றைச்சொல்
குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நான் தேடிக்கொண்டிருந்தது சிறந்த அதிபர், சிறந்த நிர்வாகி, அது பெண்ணாகவும் இருக்கலாம், ஆணாகவும் இருக்கலாம். அழிவு யுத்த காலத்தில் அச்சம் தரும் சூழலில் வராது வந்த அதிபர் நாயகமாக யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் வந்தமர்ந்தவர் அமரர் இராசதுரை.
இடிந்தும் சிதைந்தும் இருந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை மறுபடி தூக்கி நிறுத்திய அவரது சாதனைகளுக்கு உந்து கோலாக நான் இருந்திருக்கிறேன் என்று சாட்சியம் கூற அதிபர் இராசதுரை இன்று உயிருடன் இல்லை.
ஆனாலும் சாட்சியம் கூற இன்றும் வரலாற்று மனிதர்கள் உண்டு. தமிழ் தேசியம் என்ற ஒற்றைச்சொல் மந்திரத்தின் பெயரால் அதிபர் இராசதுரை என்ற ஆளுமை இல்லாமால் ஆக்கப்பட்டார்.
அவருக்கு அடுத்து நான் கண்ட சிறந்த நிர்வாக திறன் மிக்கவர் அதிபர் இந்திரகுமார். இவரை விடவும் ஆற்றல் உள்ளவர் ஒரு பெண்ணாக இருப்பினும் அவரையே நான் சிபாரிசு செய்திருப்பேன்.
இங்கு பெண் ஆண் பிரச்சினை அல்ல பிரதானம், ஆளுமையும் ஆற்றலும் மிக்கவர்களே எமக்கு தேவை. அதிபர் இராசதுரையை தமிழ் தேசியத்தின் பெயரால் கொன்றொழித்து அகற்றியது போல் அதிபர் இந்திரகுமாரை பெண்ணியத்தின் பெயராலும் சாதியத்தின் பெயராலும் உயிருடனே அகற்ற முற்படும் செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |