கோவை கார் சிலிண்டர் வெடிப்பு பயங்கரத்தின் பின்னணி! ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கையர்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 13வது நபராக அசாருதீன் என்பவரை இந்திய தேசிய புலானாய்வு முகமை (NIA)கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சதி திட்டம்
இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது.
சதி திட்டத்தை செயல்படுத்த முயன்றபோது பொலிஸார் வாகன தணிக்கையால் என்ன செய்வது என தெரியாமல் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து முபின் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலானாய்வு முகமை (NIA) பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை தேசிய புலானாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பில் 13-வது குற்றவாளியாக அசாருதீன் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
அசாருதீனை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குண்டுவெடிப்புச் சம்பவங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய புகாரில் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் கைது செய்யப்பட்டார்.
கேரள சிறையில் இருந்த அசாருதீனை, கோவை சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன் சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அதன்பேரில் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி தேசிய புலானாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |