கோவை வெடிப்பு சம்பவம்: உயிரிழந்தவருக்கு இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுடன் தொடர்பா..!
இந்தியாவின் கோவையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர், இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை வெடிப்பு சம்பவம்
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சம்பவத்திற்கு முதல்நாள் இரவு ஜமேசா முபீனுடன், 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள் தூக்கிச் செல்வதும் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த ஜமேசா முபீனின் நண்பர்களான உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடுத்த மாதம் 8ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மேலும் தெரிவிக்கையில், கைதானவர்களில் மூவர் சிசிடிவி காணொளி காட்சியில் பதிவாகியிருந்தவர்கள். அத்துடன் கைதான சிலர் கேரளா சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் என்பதுடன் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாட்ஷாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்களுடன், முபீன் தொடர்பில் இருந்தார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.