கந்தளாயில் தென்னை மரங்களை அழிக்கும் வண்டுத் தாக்குதல்: விவசாயிகள் கவலை
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட வென்றாசம் புரப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தென்னை மரங்களை அழிக்கும் "தென்னம் வண்டு" எனப்படும் பூச்சித் தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட வென்றாசம் புரப் பகுதியில் இந்தத் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வண்டுத் தாக்குதலால் அப்பகுதியின் பெரும்பாலான தென்னை மரங்கள் தமது காய்க்கும் திறனை முற்றாக இழந்து அழிந்து வருகின்றன. இது தென்னை விவசாயத்தை நம்பியுள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மரங்களுக்கு எண்ணெய் சார்ந்த மருந்துகளைத் தெளித்தும் இந்த பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் வேண்டுகோள்
வண்டுகளின் பரவலைத் தடுக்கும் நோக்கில், வேறு வழியின்றி சில பாதிக்கப்பட்ட மரங்களுக்குத் தீ வைக்கும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது அவர்களின் இழப்பை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. கந்தளாய் மட்டுமல்லாது, வான் எல, வட்டுகச்சி மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த பூச்சித் தாக்கம் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும் இந்த தீவிரமான பிரச்சனையை உடனடியாகக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கண்டறிந்து, விவசாயிகளின் இழப்பீட்டைக் குறைக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
