தேங்காயின் விலையில் கடுமையான உயர்வு! குறைந்துள்ள உற்பத்தி
2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதுவே இலங்கையில் தேங்காய் விலை உயர்விற்கு காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க(Chaturanga Abeysinghe) தெரிவித்துள்ளார்.
தேங்காய் உற்பத்தி
நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நம் நாட்டில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைச்சல் 50 தேங்காய்களாகும். சரியான முறையில் பாராமரிக்கப்பட்டால் 80 தொடக்கம் 100 தேங்காய்கள் வரை உற்பத்தித்திறனை அடைய முடியும். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு அண்ணளவாக 3,100 மில்லியன் தேங்காய்களை பெற்றுள்ளோம்.
இதன்படி 2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டன. இதுவே இந்நிலைக்கு காரணமாகும்.
தேங்காய் ஏற்றுமதி
இந்த நெருக்கடி இரண்டு மூன்று மாதங்களில் தோன்றியதல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2600 மில்லியன் தேங்காய்களில் 1800 மில்லியன் வீட்டுத்தேவைக்காக பெறப்பட்ட பின்னர் மீதமுள்ளவற்றில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதுடன் சிறிய அளவு தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் இந்த அளவு தேங்காய் ஏற்றுமதி தொழிலை தக்கவைக்க ஏற்றதாக இல்லை. எனவே அவர்கள் தமது தொழிலை நடத்துவற்கு தேவையான தேங்காயை சந்தையில் இருந்து வாங்குகின்றனர்.
இதன் காரணமாகவே தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்வடைகின்றது. தேங்காய்களை ஏற்றுமதி செய்யும் போது நாட்டுக்கு டொலர்களை கொண்டுவர முடியும். தேங்காய்களின் முழுப்பகுதியையும் டொலராக மாற்ற முடியும்.
குறிப்பாக தேங்காயின் உட்பகுதியின் உலகளாவிய ஏற்றுமதி சந்தை 27 முதல் 30 பில்லியன் வரை மதிப்புடையது.
இவற்றுள் எமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் 1.5 பில்லியன் டொலர் பங்கை அடைவதற்கு இலக்கு வைத்துள்ள போதும் உள்ளூர் சந்தையிலிருந்து விநியோகம் இல்லாமை முக்கிய நெருக்கடியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |