மக்களை ஏமாற்றுவதே இணைந்த சிறுபான்மை அரசியல்: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசப்படுகின்ற சூழலில் மலையகக் கட்சிகள் மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான டி.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் கட்சிகளுக்கும், தேசிய அரசியல் செய்யும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் மாறுபட்ட அரசியல் கொள்கைகளும் நிகழ்ச்சி நிரலும் உண்டு என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அரசியல் அபிலாசைகள்
கடந்த கால வரலாறு நமக்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லித் தரத் தவறவில்லை.
தமிழ் மக்களின் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அதிலும் கூட பல்வேறு மாறுபட்ட கருத்தியல் தளம் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் மலையகத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் கூட வேறுபாடு இருக்கின்றது என்பதையும் கூட வரலாறு தெளிவான சான்றுகளுடன் நிரூபிக்கின்றது.
அரசியல் எதிர்பார்புக்கள்
கடந்த 1977ஆம் ஆண்டு தமிழ் ஈழத்துக்கான அரசியல் ஆணையை தமிழ்க்கட்சிகள் அனைத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இணைந்து கேட்ட தேர்தலில் மக்கள் வழங்கினார்கள்.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார் ஆனாலும் கூட்டணியின் ஒரு தலைவரான எஸ்.தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து அமைச்சுப் பதவி பெற்றார்.
இதற்குக் காரணம் மலையகத் தமிழர்களின் அரசியல் எதிர்பார்புக்களை தமிழ் ஈழ ஆணைக்குள்ளோ அல்லது எதிர்க்கட்சி அரசியல் நிரலுக்குள்ளோ நின்று நிவர்த்தி செய்ய முடியாது.
அரசியல் கட்சிகள்
அதன் பின்னர் அரசாங்கம் சார்ந்த அரசியல் நிலைப்பட்டையே எடுக்கும் வண்ணம் அவரது கட்சி செயற்படத் தொடங்கி இன்று வரை இது தொடர்கின்றது.
இது போன்றே தமிழ் பேசும் சிறுபாண்மை முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சிகள் எல்லாக் காலமும் ஏதோவொரு விதத்தில் அரசாங்கத்துடன் இணைந்தே முன்னெடுத்து வருகின்ற தன்மையை நாம் அவதானிக்கலாம்.
நிலைமைகள் இப்படி இருக்க தேசிய அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் உதவி அல்லது ஆதரவு எதற்குத் தேவை என்ற கேள்விக்கு மிக இலகுவான பதிலைச் சொல்ல முடியும்.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வருமானால் அதில் தமது வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு ஒரு பொது அறிவித்தல் விடுக்கும் வரைத்தான் அதைத் தாண்டி வேறு எதிர்பார்ப்புகள் தேசியக் கட்சிகளுக்குத் தேவைப்படுவதில்லை.
இந்நிலைமைகள் இப்படியிருக்க சிறுபான்மைகளின் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து இந்நாட்டில் பொது அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது என்பது காலத்தை வீணடிக்கும் ஒன்றாகும்.
நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை முன்னெடுப்பதை விட தமிழ் தேசியபரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் சாத்தியமான வேறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது சாலச் சிறந்தது.
மக்களை காலத்துக்கு காலம்
ஏமாற்றும் வித்தைகளில் ஒன்றுதான் இணைந்த சிறுபான்மை அரசியல் என்பது.
எனவே தேவையற்ற அலங்காரத் திசை திருப்பல்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு காலத்தை
வீணடிக்காமல் தமிழ் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
