சீனாவில் 82 பேரை பலிகொண்ட நிலக்கரி சுரங்க விபத்தின் திடுக்கிடும் பின்னணி
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் குறைந்தது 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் சீன சுரங்கத் துறையில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகக் கருதப்படும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இலாப நோக்கத்திற்காகப் பாதுகாப்பு விதிகள் முற்றிலும் மீறப்பட்டிருப்பதுடன், அதிகாரிகளை ஏமாற்றப் போலி கதவுகள் மற்றும் இரகசிய சுரங்கப் பாதைகள் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலக்கரி சுரங்க விபத்து
அதிகாரப்பூர்வ ஆய்வுகளில் இருந்து தப்புவதற்காக, இந்த சுரங்கத்தை நிர்வகிக்கும் நிறுவனம் 'யின்-யாங் வரைபடங்கள்' எனப்படும் இருவேறு திட்ட வரைபடங்களையும், கண்காணிப்பு அமைப்புகளையும் கையாண்டுள்ளது.
ஒரு வரைபடம் உண்மையான சுரங்கப் பணிகளுக்காகவும், மற்றொன்று அரசு அதிகாரிகளின் ஆய்வுகளின் போது காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுரங்கத்திற்குள் இரகசியமாகத் தோண்டப்பட்ட பாதைகளை, கொன்கிரீட் கலவை தெளிக்கப்பட்ட பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் கம்பி வலைகளைக் கொண்டு, அசல் பாறைச் சுவர் போன்ற போலி கதவுகளைக் கொண்டு மறைத்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது இந்த போலி கதவுகள் மூடப்பட்டு, நிலக்கரி சாம்பல் பூசி மறைக்கப்படும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த இரகசியப் பாதைகளில் பணியாற்றுவதற்காகப் பதிவுசெய்யப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திடுக்கிடும் பின்னணி
இவர்களுக்கு அவசர காலங்களில் இருப்பிடத்தைக் கண்டறிய உதவும் கட்டாய 'இருப்பிடக் கண்காணிப்பு கருவிகள்' வழங்கப்படவில்லை.
விபத்து நடந்த அன்று சுரங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் 124 தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாகக் காட்டப்பட்ட நிலையில், உண்மையில் 247 பேர் உள்ளே வேலை செய்துள்ளனர். அதாவது 123 தொழிலாளர்கள் எவ்வித கண்காணிப்பும் பதிவும் இன்றி இரகசியப் பாதைகளில் வேலை செய்துள்ளனர்.

துல்லியமான வரைபடங்கள் மற்றும் தொழிலாளர்களின் இருப்பிடத் தகவல்கள் இல்லாததால் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபாயகரமான எரிவாயுப் பகுதி என வகைப்படுத்தப்பட்ட போதிலும், அங்கு எரிவாயு கண்காணிப்பு உபகரணங்களும் பொருத்தப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாகச் சுரங்க அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சீனா முழுவதும் உள்ள பல சுரங்கங்களில் பாதுகாப்பு ஆய்வுகளுக்காக உற்பத்திகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 9 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam