கிளப் வசந்த கொலை தொடர்பில் லொக்கு பெட்டி பரபரப்பு வாக்குமூலம்
கிளப் வசந்த படுகொலை தொடர்பில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த லொகு பெட்டி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'லொகு பெட்டி' என்றழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா எனும் பாதாள உலகப்புள்ளி நேற்று பெலாரூஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
தற்போது லொகு பெட்டியிடம் மேல்மாகாண தெற்கு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேவையேற்பட்டால் அவருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக் கொள்ளப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலம்
இதற்கிடையே கிளப் வசந்த படுகொலை தொடர்பில் லொக்கு பெட்டி பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இலங்கையில் பல திட்டமிட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷ் என அழைக்கப்பட்ட மாகந்துரே மதூஷ் இறந்ததின் பின்னர், அவரது பணத்தை கிளப் வசந்த வைத்திருந்தார். அதனை வழங்க மறுத்து காஞ்சிபாணி இம்ரானிற்கு அச்சுறுத்தல் வழங்கியதற்காகவே கிளப் வஸந்தவை கொலை செய்ததாக 'லொகு பெட்டி' தெரிவித்துள்ளார்.
பிரபல YouTube சேனலில் 'கிளப் வசந்த' அளித்த நேர்காணலில், தனக்கு இரண்டு எதிரிகள் இருந்ததாகவும், ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றவர் பயத்தில் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இறந்தவர் மதூஷ் என்றும், நாட்டை விட்டு தப்பியவர் கஞ்சிபாணி இம்ரான் என்றும் லொகு பெட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளப் வசந்த படுகொலை
மதூஷின் பணம் 'கிளப் வசந்த'விடம் இருப்பதாக தெரிந்ததும், அந்த பணத்தை தன்னிடம் வழங்குமாறு கஞ்சிபாணி இம்ரான் கோரிய போது 'கிளப் வசந்த' அதனை நிராகரித்துள்ளார். இதனால், இம்ரான் கடும் கோபத்தில், வசந்தவை படுகொலை செய்யத் தீர்மானித்ததாகவும், இம்ரான் மற்றும் தாம் இணைந்து கொலை திட்டத்தை தயாரித்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
'கிளப் வசந்தவை' படுகொலை செய்த 'டட்டூ மல்லி' தனது சொந்த ஊரினை சேர்ந்தவர் என்பதால், அவரையும் இதில் ஈடுபடுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் போலி கடவுச்சீட்டில் துபாய் சென்ற அவர், அங்கிருந்து ரொட்டும்ப அமில என்ற குற்றவாளியுடன் சேர்ந்து பெலாரூஸ் நாட்டுக்குச் சென்றதாகவும், அங்கு கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லொகு பெட்டி என்றழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா, இலங்கை ராணுவத்தின் 07வது ரெஜிமண்ட்டில் முன்னர் பணியாற்றிய ஒரு சிப்பாய் ஆகும். தற்போதைக்கு அவர் மீது கொலை, துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
