மூடப்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்
உடையார்கட்டு- மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக இன்றையதினம் (20.03.2026) மூடப்பட்டமையால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
உடையார்கட்டு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(19.3.2026) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து வைத்தியசாலை காவலாளியை குறித்த நபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டு இன்றையதினம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்கள் சிரமம்
இந்நிலையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதால் குறித்த கிராம நோயாளர்கள் மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், சிகிச்சை பெற வந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து வைத்தியசாலை முன்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,பின்தங்கிய கிராமமாக இருப்பதனால் இந்த வைத்தியசாலையை விட்டால் பல கிலோமீற்றர்கள் கடந்தே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை.
ஒன்று இரண்டு நபர்களின் செயற்பாட்டால் நோயாளர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.



