வடக்கு - கிழக்கில் காலநிலை சீர்கேட்டால் பல்வேறு மக்கள் பாதிப்பு
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாயத்தை எதிர் நோக்கக்கூடிய உயர்தர பரீட்சார்த்திகள் கிண்ணியா பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக, பொதுமக்களுக்கு இன்று(24.11.2024) விடுத்துள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பலத்த மழை
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிஞ்சாகேணி பாலத்தின் நீர்மட்டமும் அதிகரித்து உள்ளது.
இதனால் இந்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்பவர்கள் அவதானமாக செல்வது பாதுகாப்பானது. கிண்ணியா பிரதேச செயலகத்திலும் பல தாழ்நிலை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பரீட்ச்சாத்திகளின் நலன் கருதி, 24 மணிநேர பாதுகாப்பு சேவை பிரதேச செயலகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பரீட்ச்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சினைகள் எதிர்நோக்வோர் முன்கூட்டியே 0779592709 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அம்பாறை
மேலும், அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.
தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன.
மேலும், அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
செய்தி - ஷிகான்
வவுனியா
இந்நிலையில், வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 2 வடிகால்களும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தி - திலீபன்
மன்னார்
அத்தோடு, மன்னாரில் வெள்ள அனர்த்த பாதிப்பு காரணமாக மன்னார் - ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (24) சந்தித்து கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
காற்றாலை திட்டத்தின்போது வடிகால்கள் மூடப்பட்டதனாலேயே ஓலைத்தொடுவாய் பகுதியில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்திருப்பதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறு காற்றாலை திட்டத்தின்போது மூடப்பட வாய்க்கால்களை மறு சீரமைப்புச்செய்தால் வெள்ள அனர்தத்தை குறைக்க முடியும் எனவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது டன், அதேவேளை நுளம்பு வலைக்கான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
செய்தி - ஆஷிக்
மன்னார் போராட்டம்
இந்நிலையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கிராமத்தில் 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த கிராமத்திற்குச் செல்லும் பாதைக்கு அமைக்க நீர் வெளியேறிச் செல்லும் மதகை (போக்) அவ்விடத்தில் கொண்டு வரப்பட்டு 4 வருடங்களாகிய நிலையில் அவற்றை உரிய முறையில் செப்பனிடவில்லை. குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தால் வெள்ள நீர் தமது கிராமத்தில் தேங்காது எனவும்,குறித்த நடவடிக்கையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
மேலும் வெள்ள நீரை தமது கிராமத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |