மன்னார் மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாளையதினம் (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
மன்னார் அலுவலகத்தில் இன்று(21) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் இதுவரை குறைந்த அளவு மழைவீழ்ச்சி யே பதிவாகி உள்ளது.எனினும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிக அளவான மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. எனினும் குறித்த மழை வீழ்ச்சி காரணமாக மாவட்டத்தில் எவ்வித அனர்த்தங்களும் பதிவாகவில்லை.
முன்னாயத்த நடவடிக்கைகள்
மன்னார் மாவட்டத்தில் பருவகால மழை தொடர்பாக மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த முன்னாயத்த கூட்டங்களின் போது வெள்ள அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கை களை மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பருவகால மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தை தடுப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் பல்வேறு திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகள்,உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக வடிகான்கள்,கழிவு நீர் வாய்க்கால்கள், என்பன துப்புரவு செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் வெள்ள நீர் இலகுவாக கடலை சென்றடையக் கூடிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
தற்போது உயர்தர பரீட்சை இடம் பெற்று வருகின்றன.எனினும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை.சிறப்பான முறையில் பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றன.அனர்த்த முகாமைத்துவ நிலையம் மன்னார் வலயக்கல்வி பணிமனை உடன் தொடர்பில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
காற்றின் வேகம் அதிகரித்தால் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.எனவே கடற்தொழிலில் ஈடுபடுகின்ற கடற்தொழிலாளர்கள், அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

காற்றழுத்த தாழமுக்கம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.
023-2117117 மற்றும் 023-2250133 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் தொலைபேசி இலக்கம் 077-2320529 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.