முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் : மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு - நந்திக்கடல் களப்புப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(02.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே சட்டவிரோத தொழிலில் ஈடுபடுதல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர், கடுமையான முரண்பாடாக மாறி தாக்குதலாக மாறியுள்ளது.
மூவர் படுகாயம்
இந்த சம்பவத்தில் கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 33 மற்றும் 49 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், நீராவிப்பிட்டியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம், “நீரியல் வளத்திணைக்களம் சட்டவிரோத தொழிலை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது” என குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.