பள்ளிவாசலில் ஏற்பட்ட மோதல் விவகாரம்! விகாரையில் சமரசம்
காலி கிந்தோட்டைப் பிரதேச பள்ளிவாசல் ஒன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு விகாரையொன்றில் வைத்து சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசல் நிர்வாக சபையில் 2021ஆம் ஆண்டு வரை ஒற்றுமையாக இருந்தவர்கள் இந்த ஆண்டு இரண்டு குழுக்களாக பிளவடைந்து பொறுப்புகளை ஏற்க முயற்சித்தமை குறித்த மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இருதரப்பு மோதல்
நிர்வாக சபையின் நீண்ட கால அனுபவமுடைய நடுத்தர வயது கடந்தவர்கள் ஒருதரப்பாகவும், இளைஞர்கள் மறுதரப்பாகவும் பிரிந்து பொலிஸில் முறைப்பாடு செய்திருந்துள்ளனர். எனினும் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக இருதரப்பினரும் மோதல்களில் ஈடுபடும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பிரதேசத்தில் இருக்கும் விகாரையொன்றின் விகாராதிபதி ஒருவர் பள்ளிவாசல் நிர்வாக சபையின் இருதரப்பையும் விகாரைக்கு வரவழைத்து சமரசம் செய்துள்ளார்.
குர்ஆனில் சத்தியம்
ஒற்றுமையின் அவசியம், பிளவுகளின் பாரதூரம் மற்றும் பின்விளைவுகள் குறித்து தெளிவுபடுத்திய அவர், பள்ளிவாசல் நிர்வாக விடயத்தில் இருதரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என புனித குர்ஆனில் சத்தியம் செய்து தருமாறு வலியுறுத்தி இருதரப்பையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளார்.
விகாரையில் நடைபெற்ற சமரச மாநாட்டில் நிர்வாக சபை உறுப்பினர்கள் மட்டுமன்றி முஸ்லிம் பெண்களில் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



