சிவில் சமூக செயற்பாட்டாளரை மிரட்டிய மர்ம கும்பல்! பொலிஸார் தீவிர விசாரணை(Photos)
வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர்,சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின் வீட்டுக்கு சென்று விசாரணைகனை மேற்கொண்டுள்ளனர். அவரது வசிப்பிடமான கிரானில் இன்று காலை இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தமது வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று (03.10.2023) நேரில் சென்று முறைப்பாடு தெரிவித்திருந்தார்.
விசாரணை
அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
லவக்குமார் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளையிடம் வாக்கு மூலத்தினை பெற்றதுடன் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் பிரதேசத்தில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராக்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.
எச்சரிக்கை
கடந்த 2ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் எமது வீட்டுக்கு முன்பாக நின்று சத்தமிட்டு இருவர் அழைத்தார்கள். நான் வெளியில் சென்றபோது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கலர் மற்றும் கறுப்பு ஆடைகள் அணிந்திருந்தார்கள்.வாய்கள் துணியால் கட்டப்பட்டு தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்திருந்ததுடன் அவர்கிள் ரி-56,ஏ.கே-47 துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்டிருந்தன.தன்னை பார்த்து தேவையற்ற வேலைகளை செய்வதாகவும் அவற்றினை நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
தீவுச்சேனை என்னும் இடத்தில் மறைக்கப்பட்டிருந்த விடயம் அதனை கதைப்பதற்கு மறுபடியும் தோண்டியெடுப்பதற்கு நீங்கள் எத்தனிக்கக் கூடாது, இன்று உங்களை கொல்லவே வந்தோம்.ஆனால் உங்களை எச்சரிக்கிறோம் என்று கூறிச் சென்றதாக தமது வாக்குமூலத்தை ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.