முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க தயாராகும் அரச ஊழியர்கள்
இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் அரச ஊழியர்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் இதனால் 16 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பையேனும் வழங்காது போனால் முன்னறிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க போவதாகவும் அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் அரச ஊழியர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் வழங்காத காரணத்தினால், 1.5 மில்லியன் அரச ஊழியர்கள் மற்றும் அவர்களை நம்பி வாழும் சுமார் 6 மில்லியன் மக்கள் வாழ்வதற்கான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அண்மைய புள்ளிவிபரங்களின்படி நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மாதம் வாழ்க்கை நடத்துவதற்கு 58 ஆயிரம் ரூபாய் தேவை என கூறப்பட்டுள்ளது.
தற்போது பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால், இந்த நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது. இதனால், அடுத்த சில வாரங்களுக்குள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால், முன்னறிவிப்பு எதுமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.