பிரித்தானியாவில் மனைவிக்கு கவுன்சிலர் செய்த கொடூர செயல்
பிரித்தானியாவின் ஸ்விண்டன் நகர முன்னாள் கவுன்சிலர் பிலிப் யங், தனது முன்னாள் மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி மயக்கி, தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில், அவருடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் கொன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியான 49 வயதுடைய பிலிப் யங், 2010 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் தனது முன்னாள் மனைவி ஜோன் யங் (Joanne Young) மீது இந்த தொடர் குற்றங்களை இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 48 குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதில் 11 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில், பிலிப் யங்குடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் வின்செஸ்டர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், டீன் ஹாமில்டன் என்பவர் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய ஜோன் யங், தனது பெயரும் அடையாளமும் வெளியிடப்படுவதற்கு தானாகவே சம்மதம் தெரிவித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் தனது சகோதரியுடன் முன்னிலையாகி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.