பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை
பாடசாலை செல்லும் மாணவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் இறப்புக்கான சுரக் ஷா காப்பீட்டுத் தொகையை 200,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாகக் குறைத்த அரசாங்கம், இந்த காப்புறுதி தொகையை பெறுவோர், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
கடந்த ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டபடி பெற்றோரின் இறப்புக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை ரூபாய் 600,000 லிருந்து ரூபாய் 225,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை ஒரே குடும்பத்தில் உள்ள பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பெற்றோர் இருவரும் இறந்தால், இரண்டு சந்தர்ப்பங்களுக்கும் தனித்தனியாகத் தொகை முழுமையாக வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மாகாண செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு விடுத்துள்ள புதிய சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சுடன் ஒப்பந்தம்
2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் “எப்போதும் பாதுகாத்தல் – தேசத்தின் பிள்ளைகள்” என்ற தொனிப்பொருளில் இந்த காப்புறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
2021 டிசம்பர் 2 முதல் டிசம்பர் 1 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய வகையில்,
கல்வி அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட இலங்கை காப்புறுதிக்
கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன், இந்த காப்புறுதி ஒரு வருடத்திற்கு
வழங்கப்படும்.