பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்
பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் கவனம்
இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.