கிம்புலாஹெல குணா உட்பட கைதிகளை அழைத்து வர தமிழ் நாடு செல்லும் சி.ஐ.டியினர்
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தேசிய விசாரணை முகவர் அமைப்பு கைது செய்த கிம்புலாஹெல குணா உட்பட பாதாள உலக குழுக்களை சேர்ந்த 9 பேரை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் சிலர் தமிழ் நாட்டுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர்.
இந்நிலையில், 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும், நாளையும் (25, 26) தமிழகம் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக குழுக்களை சேர்ந்த 9 குற்றவாளிகள்
இந்திய தேசிய விசாரணை முகவர் அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ள கிம்புலாஹெல குணா என்ற சின்னையா குணசேகரன்,கொட்ட காமினி என்ற அழகபெருமகே சுனில் காமினி பொன்சேகா, பும்மா என்ற ஸ்டென்லி கெனட் பெர்னாண்டோ,அத்துருகிரியே லெடியா என்ற தினமுல்ல கங்கானம்லாகே நளின் சத்துரங்க, கெசல்வத்த தனுக, வெல்லே சுரங்க என்ற காமினி சுரங்க பெர்னாண்டோ, சின்னையா திலீபன்(கிம்புலாஹெல குணாவின் மகன்), புக்குடு கண்ணா என்ற புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின் ஆகிய பாதாள உலக குழு குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வரவே குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.
இந்த நபர்கள் செய்த கொலைகள் உட்பட வேறு குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், அது குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் இருக்குமாயின் அது சம்பந்தமாகவும் தெரியப்படுத்துமாறும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் நோக்கில் இவர்கள் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இந்திய தேசிய விசாரணை முகவர் அமைப்பு இந்த சந்தேக நபர்களை கைது செய்தது.
எனினும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொடர்புகளை கொண்டிருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த 9 பேரில் பெரும்பாலானவர்களுக்கு சர்வதேச சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் மீள ஒருங்கிணைந்து வருகின்றனர் என்று செய்திகளை கசிய விடும் இந்திய புலனாய்வு பிரிவுகள்
எது எப்படி இருந்த போதிலும் இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்காக இந்திய புலனாய்வு பிரிவுகள், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை திரட்டி மீள ஒருங்கிணைந்து வருகின்றனர் என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்திய அரசின் சார்பில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்காகவே இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய புலனாய்வு பிரிவினரின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.