முல்லைத்தீவில் மியன்மார் அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்திய நபர் சிஐடிக்கு அழைப்பு
மியன்மார் அகதிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தும் வகையில், முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை(09.01.2025) நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும், அதுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி காலை 9.00 மணியளவில் கொழும்பு 01 பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் கடத்தல் விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை ஏற்பு
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதி, தான் விசாரணைக்கான சமுகளிக்க முடியாத நிலைமையில் இருப்பதாகவும், ஆகவே மற்றுமொரு தினத்தை வழங்குமாறும் ஜாட்சன் பிகிராடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை நாடு கடத்தக் கூடாது என கோரி கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு சென்ற பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |