அசாத் சாலிக்கு பாதிப்பு ஏற்பட்டால் குற்றப்புலனாய்வு திணைக்களமே பொறுப்பு! சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அவசியப்படுவதாகவும், தேவையான வைத்திய வசதிகள் உடனடியாக வழங்கப்படாத காரணத்தினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அசாத் சாலி பாதிக்கப்பட்டால் அதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமே பொறுப்புக் கூறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அசாத் சாலியின் சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா, அசாத் சாலியின் மனைவியின் அறிவுறுதலுக்கு அமைய நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
