கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த லேபர் கட்சியின் பேச்சாளர்
கிறிஸ்மஸ் தீவில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பமான (பிரியா-நடேஸ் குடும்பம்) விடுதலை செய்யப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் செனட்டர் Kristina Keneally, இக்குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
முன்னதாக தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென செனட்டர் Kristina Keneally அடங்கிய நாடாளுமன்ற குழு கிறிஸ்மஸ் தீவிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரியா-நடேஸ் குடும்பத்தை தான் சந்திக்கவுள்ள செய்தியை அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், நாடாளுமன்ற குழுவுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனி விமானத்தை ரத்துச் செய்துவிட்டதாக Kristina Keneally குற்றம்சாட்டியிருந்தார்.
இதன்மூலம் பிரியா-நடேஸ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கான தனது முயற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழ் குடும்பத்தைப் பார்வையிடுவதற்கு தனது சொந்த செலவில் கிறிஸ்மஸ் தீவிற்குச் சென்ற அவர் அக்குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதுடன், அங்குள்ள நிலைமைகளையும் கேட்டறிந்துள்ளார்.
பிரியா தனிமையாகவும் மனச்சோர்விலும் இருக்கிறார் எனவும், biloela-க்கு எப்போது திரும்பிச் செல்வோம் என்பதே அந்தக் குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும், அதை மட்டுமே அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் Kristina Keneally தெரிவித்தார்.
அரசு இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பத்தை விடுதலை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.