சீன கப்பலால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது தொடர்பில் இந்தியாவின் கருத்து குறித்து இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து இலங்கையின் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதே தமது எதிர்பார்ப்பு என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன கப்பலால் ஆபத்து
அயல் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதால், சர்வதேச கடமைகளுக்கு இணங்க அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களையும் பாதுகாப்பதே இலங்கையின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய நிலையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தமை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்கவிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை பகைக்க கூடாது
“சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை கருத்திற் கொண்டு இலங்கை தீர்மானங்களை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் யாருடன் இணைந்திருப்பது கட்டாயம் என்ற விடயத்தை இலங்கை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
இந்தியா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்க போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் சந்தர்ப்பத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளுடன் இணைந்துள்ளது.
இந்த நிலையில் கப்பல் விடயத்தில் இலங்கைக்கு கடுமையான நிலைமை ஒன்றே காத்திருக்கின்றது.
சர்வதேச ஆதரவை இழக்கும் அபாயம்
இலங்கை சர்வதேச உறவுகளை துண்டித்துக் கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் சீன கப்பல் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை அவதானம் செலுத்த வேண்டும்.
இலங்கை பொருளாதார நிலைமைக்கமைய அனைத்து நாடுகளின் உதவிகளும் அவசியமாகும். இதன் போது எந்த நாடுகளை பகைத்துக் கொண்டாலும் இலங்கைக்கு அது ஆபத்தாகிவிடும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை எதிர்பார்க்கும் இலங்கை உலக நாடுகளின் உறவுகளை பேணவில்லை என்றால் மிக பெரிய ஆபத்திற்குள் செல்லும். இதனால் மிகவும் அவதானமாக இலங்கை செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படவில்லை என்றால் இலங்கைக்கு கடன் பெற முடியாமல் அதல பாதாலத்தில் விழும் நிலை ஏற்படலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.