அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வரும் சீன கப்பல்: திகதியை அறிவித்தது இலங்கை வெளிவிவகார அமைச்சு (Video)
சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன தூதரகத்துக்கு அறிவித்துள்ளது.
வாய்மொழி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாறு மைத்ரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் வருவதற்கான அனுமதி, ஜூன் 28 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கான அனுமதி ஜூலை 12 வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியயையடுத்து, யுவான் வாங் -5 கப்பல் ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது.
இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனுமதி
இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியாமல் இந்த கப்பலுக்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 24 நாட்கள் கடலில் பயணித்த இந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைய 3 நாட்கள் இருக்கும் நிலையிலேயே, வரும் திகதியை தாமதப்படுத்துமாறு கடந்த 8 ஆம் திகதி சீன தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
உணவு பிரச்சினை
குறித்த கப்பல் அம்பாந்தோட்டையை அடைந்த பின்னர், அதிலுள்ள 2000 பேருக்கான உணவு தீர்ந்துவிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்களுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையிலேயே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பிறகு இலங்கை வருமாறு குறித்த கப்பலுக்கு சீன தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் போர் கப்பல் இலங்கை வருகை
இதேவேளை, ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொழும்புக்கு வரும் பாகிஸ்தான் போர் கப்பல் தனது முதல் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை வருகிறது.
இந்தக் கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் சீன கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஒருநாட்டை வைத்து, இன்னொரு நாட்டை கேவலப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த இரு கப்பல்களும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன கப்பல் விவகாரம் - தடுமாறும் இலங்கை! இந்தியாவிடமிருந்து கிடைக்கும் உளவு விமானம் |