இலங்கையில் பூந்தி பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
சந்தையிலுள்ள பல பூந்திகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சந்தையில் இருந்து பெறப்பட்ட 16 பூந்தி மாதிரிகளில் 13 மாதிரிகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் கலந்த பூந்தியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிரிகளின் அளவு

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கிறீம், பால் தேநீர் மற்றும் சிரப் வகைகளின் 21 மாதிரிகளில் நுண்ணுயிரிகளின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளமை தொடர்பில், குறித்த மாதிரிகள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டு, அதற்கான அறிக்கைகளும் தற்போது கிடைத்துள்ளன.
இதனையடுத்து, குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி, அவற்றுக்கு தரச் சான்றிதழைப் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.