ராஜபக்ச குடும்பத்தில் அடுத்த பெண் ஜனாதிபதி! லிமினி தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிராக எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே நாமல் ராஜபக்சவை குற்றவாளியாக ஏற்றுக்கொண்டே இந்தப் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரச்சார நடவடிக்கை
எதிர்காலப் பெண் சிங்கம், அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அழைத்து இந்தப் புதிய பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவுடன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுள் ஷமிந்திர மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
அதற்கமைய, வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே குறித்த இலஞ்சம் பெற்றமை தொடர்பில் நாமல் ராஜபக்சவும் குற்றவாளி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் தீர்மானிக்கப்பட்டு, லிமினி ராஜபக்ச தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது.