இலங்கைக்குள் வரும் சீன உளவு கப்பல்: விமானப்படையுடன் இணைக்கப்படும் இந்திய உளவு விமானம்
சீனாவின் யுவான் வாங் 5 கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிர்வரும் 16ம் திகதி வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதி தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கையின் துறைமுக அதிபர் நிர்மல் பி சில்வா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"கப்பல் இலங்கைக்கு வந்ததன் பின்னர் நியமித்த உள்ளூர் முகவருடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியின் இராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என்று அண்டை நாடான இந்தியாவின் கவலைகள் இருந்தபோதிலும், சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் திகதி சீன கப்பல் வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட முதல் டோர்னியர் விமானம் ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையுடன் இணைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் திகதியில் இருந்து 17ஆம் திகதி வரை அது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்தது.
எனினும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து கப்பலின் வருகை தாமதமானது.
மேலும், யுவான் வாங்-5 கப்பல் இலங்கை, சீனா, இந்தியா மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட்டமிடும் யுத்த - உளவு கப்பல்கள்! இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா |