இந்தியாவின் நட்பு நாடுகளை குறிவைக்கும் சீனா! - தந்திரமாக முன்னெடுக்கப்படும் நகர்வுகள்
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் பிரிட்டிஷ் மற்றும்ஜப்பானால் ஆளப்படும் நாடாகத் திகழ்ந்த சீனப் பெருந்தேசம், மாவோசேடொங்கின் வருகையின் பின்னரே 'இனிமேல் நாம் ஆளும் தேசமாகஇருப்போமே தவிர ஆளப்படும் நாடாக இருக்கப் போவதில்லை' என்ற உறுதியான முடிவுக்கு வந்தது.
சீனாவின் சாதுரியமானநகர்வுகளும், திட்டங்களும் நீண்ட தூரப் பார்வைகளையும் இலக்குகளையும் கொண்டதாகவும் பிராந்திய வல்லரசாகத் திகழவேண்டும் என்ற பெருங் கனவைக் கொண்டதாகவும் அமைந்தன.
தன் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்காக கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் சீனா பயன்படுத்திக் கொண்டமை அந்நாட்டுக்கு ஏற்றத்தைத் தந்தது.
மூடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருந்த சீனா, எதிர்கால உலகம் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியே நகரப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு தன் கதவுகளை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கித் திறந்து விட்டது.
சீனாவின் நடவடிக்கைகளை எப்போதும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா, பொருளாதார ரீதியாக சீனா மேற்கொண்ட புதிய நகர்வுகளின் ஆழத்தையும் விரிவையும் நோக்கங்களையும் சில சமயம் அந்நேரத்தில் மிகச் சரியாக எடைபோடத் தவறியிருக்கலாம்.
தடைபோட்டிருந்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்றைய நிலையை விட மிக அதிகமாக இருந்திருக்கும். இந்தோ - பசுபிக் பிராந்திய நாடுகளை குறிவைத்ததாகவும் ஆபிரிக்க நாடுகளை இலக்காகக் கொண்டதாகவும் சீனா தனது கடல் பட்டுப்பாதைத் திட்டத்தை நர்த்தி வருகிறது.
சீனா இந்நாடுகளை இரண்டு வளையங்களாகப் பிரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. முதலாவது இந்தியாவின் உடனடி பிராந்திய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மியன்மார் என்பன இதற்குள் அடங்கும்.
பாகிஸ்தான் இந்தியாவின் எதிரிநாடு என்பது சீனாவுக்கு எப்போதுமே சாதகமான அம்சமே. வங்கதேசம் இலங்கையைப் போலவே சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சரிசமமாக வைத்துக் கொள்ள விரும்பும் நாடு. அதேசமயம் அந்நாடு உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ள நாடும் கூட.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பற்றி விரிவாகப் பார்க்க வேண்டியதில்லை. சீனாவின் அடுத்த இலக்கு மாலைதீவு. இந்தியாவை அண்மித்த தீவுக் கூட்டமான மாலைதீவை தன் செல்வாக்குக்குள் கொண்டு வந்து, ஏற்கனவே இந்தியா பேணி வரும் செல்வாக்கை குறைக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது.
மாலைதீவின் பிரதமருக்கு சீனாவில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டதையும், சீன வெளிவிவகார அமைச்சர் தன் புத்தாண்டு விஜயமாக மாலைதீவு சென்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்ததாக நேபாளத்திலும் தன் செல்வாக்கை ஸ்திரப்படுத்திக் கொள்ள சீனா முயன்று வருகிறது.
அதன் முயற்சிகள் பலன் அடைந்து வருகின்றன என்றும் கூறலாம். மியன்மார் ஒரு இராணுவ ஆட்சி நடைபெறும் நாடாக இருப்பதுவும் ஜனநாயகம் அங்கே பாகிஸ்தானைப் போல பெயரளவில் காணப்படுவதும் சீனாவுக்கு சாதகமான அம்சங்கள்.
சீனாவின் கடல் பட்டுப்பாதையில் மியன்மாரும் ஒரு அங்கம். எனவே மியன்மாரில் சீனா முதலீடுகளை செய்து வருகிறது. பாதை அமைப்பு, குழாய் அமைப்பு என்பனவற்றில் சீனா ஈடுபாடு காட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் நிர்வாகத்தில் இருந்த போது சீனா ஆப்கான் விவகாரத்தில் தலையிடவில்லை. ஆனால் ஆப்கான் தொடர்பான அதன் நிலைப்பாடு அமெரிக்க எதிர்ப்பு நிலையில்தான் இருந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல.
அமெரிக்க நிர்வாகத்தின் கீழான ஆப்கானிஸ்தானில் இந்தியா பெருமளவு முதலீடுகளைச் செய்தது. பாதைகள், பாலங்கள், கட்டடங்கள் எனப் பல துறைகளில் இந்தியா திட்டங்களை மேற்கொண்டிருந்து. காபூல் பாராளுமன்றத்தை அமைத்தது இந்தியாவே.
எனவேதான் கடந்த வருடம் அமெரிக்கா அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய போது அங்கிருந்த இந்தியர்களும் இராஜதந்திரிகளும் காபூலை விட்டு புறப்பட வேண்டியதாயிற்று.
'அமெரிக்காவின் நண்பன் எனக்கு எதிரி' என்பதே தலிபான்களின் இந்தியா மீதான பார்வையாக இருக்கும் என்பது மிகத் தெளிவானது என்பதால் இந்தியா வெளியேற வேண்டியதாயிற்று.
தற்போது இந்திய நலன்கள் ஆப்கானிஸ்தானில் சேதமடைந்துள்ளன என்பது உண்மை என்பதால் அந்த இடத்தைப் பிடிப்பதில் சீனாவும் பாகிஸ்தானும் முனைப்பாக உள்ளன.
தலிபான்களை அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேசநாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் கைவிட்டுள்ள நிலையில் ஆபத்பாந்தவனாக இருக்க வேண்டிய பொறுப்பு சீனாவுடையதாகிறது. ஆனால் எதிர்பார்ப்புகளோடுதான் சீனா உதவும் என்தே அந்நாட்டின் அரசியல் அணுகுமுறை.
ஆப்கானிஸ்தானில் இருக்கக் கூடிய கனியவளங்களை சீனா குறிவைத்திருக்கலாம். இது இவ்வாறிருக்கையில் அமெரிக்காவும் நேட்டோவும் அவசர அவசரமாக வெளியேறியதால் பெருமளவு ஆயுதங்களை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.
இந்த ஆயுதங்களின் ஒரு பகுதி இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளிடம் சென்றடைவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவை அண்மித்த மற்றும் இந்திய நட்பு நாடுகளை குறிவைத்ததாக சீனா தன் நகர்வுகளை உறுதியான முறையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த வளையத்துக்கு அப்பால் ஆபிரிக்க வளையத்தின் மீதும் சீனாவுக்கு அக்கறை உள்ளது. செங்கடல் கரையோரமான எரித்தியா, கென்யா, கிழக்கு ஆபிரிக்க - தீவுக் கூட்டங்களான சீசெல்ஸ், மொரிஷியஸ், மடகஸ்கார் என சீனாவின் கடல்பட்டுப்பாதை சுற்றி வளைந்து நீள்கிறது.
சீனா பெரிதாகவே யோசிக்கிறது; திட்டமிடுகிறது. அதற்கான உட்கட்டுமானங்களில் பெருமளவில் முதலீடு செய்கிறது. தென்கிழக்கு ஆசியாவை, இந்தோ - பசுபிக் நாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பிராந்திய வல்லரசாக வேண்டும், அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் இப்பிராந்தியத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்பதே சீனாவின் பிராந்திய மூலோபாயம்.
அதற்காக சீன இடையறாது முதலீடுகளை மேற்கொள்கிறது; திட்டங்களை வகுக்கின்றது. சீனாவின் இந்த விரிவான திட்மிடல் மற்றும் அதற்கான நகர்வுகளுக்கு எதிராக 'குவாட்' நாடுகளின் நகர்வுகள் போதுமானவையாக உள்ளனவா என்ற கேள்விக்கு நியாயமான பதில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த அமைப்பு -(அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்) -கடந்த வருடம் வாஷிங்டனில் கூடிப் பேசின. அப்பேச்சுவார்த்தையின் பின்னர் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பலன்கள் ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இதேசமயம் அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும், பிரிட்டனும் இணைந்து மற்றொரு பாதுகாப்பு அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றன. இது இந்தோ - பசுபிக் பிராந்திய இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான அமைப்பாகவே செயல்படும் எனத் தெரிகிறது.
இந்த வகையில் பார்க்கும் போது சீனாவுக்கு எதிரான அல்லது சீன நகர்வுகளை சமாளிக்கக் கூடியதாக இம்மாற்று ஏற்பாடுகள் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை என்றுதான் சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்தியாவை இராஜதந்திரிகளின் நாடு என்பார்கள்.
அரசியல்வாதிகள் எவ்வாறிருப்பினும் புதுடில்லி இராஜதந்திரிகளின் ஆலோசனைகளும் நிர்வாகமும் இந்தியாவை வழிநடத்தும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. இந்தப் பொறுப்பு தற்போது மேலும் சுமை கொண்டதாக மாறி வருகிறது.
சீனாவின் பிரசன்னம் பெருமளவில் கடன்களை வழ்குவது, முதலீடுகளைச் செய்வது என்பதாகவே உள்ளது. உள்ளூர் அரசியலில் தாம் ஈடுபாடு காட்டுவதில்லை என்ற கொள்கையில் சீனா தொடர்ந்தும் உறுதியாக உள்ளது.
எனினும் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சீனத் தூதர் வடக்குக்கு விஜயம் செய்ததும் 'இது ஆரம்பம் மட்டுமே முடிவல்ல' என்று அறிவித்ததும் கவனிக்கத்தக்கவை.
இலங்கையில் இந்தியா மேற்கொண்டிருக்கும் முதலீடுகளும் சாமானியமானதல்ல. இலங்கையில் அது எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதோடு திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் பேரிலான ஒரு கூட்டு நிறுவனத்திலும் இந்தியா முதலீடு செய்கிறது.
அடுத்த ஆறு மாத காலத்துக்கான எண்ணெய் வழங்கலுக்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை இந்தியாவுடன் ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போதைய தரவுகளை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பக்கம் இலங்கை சாய்ந்துள்ளதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.
உண்மையைச் சொல்வதானால் இலங்கையின் தேசிய கட்சிகளுடன் இந்தியாவுடன் எந்தப் பிரச்சினையும் கிடையாது. தமிழர் விவகாரங்களை இந்தியா கையில் வைத்திருப்பதே அவர்களுக்குப் பிரச்சினை.
நன்றி - தினகரன்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
