சீனாவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடி
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளப் போராடும் இலங்கைக்கு, உதவிகளை அனுப்புவதற்குப் பதிலாக சீனாவின் இராணுவக் கப்பலை இந்தியாவுக்கு அருகிலுள்ள துறைமுகத்திற்கு சீனா அனுப்புகிறது என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவினால், கட்டப்பட்டு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவ தளமாக பயன்படுத்திக்கொள்ளும் என இந்தியா கவலை கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் உள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையடுத்து, இலங்கை தனது பிரதான தெற்கு துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை 99 வருட குத்தகைக்கு 2017 இல் சீன நிறுவனத்திடம் கையளித்துள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடி
இந்த நிலையில் இலங்கை இன்று பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் இருக்கும்போது, சீனா நிவாரணங்களை அனுப்பாமல், இராணுவ கப்பலை அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு இந்தியா 4 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் இலங்கை, சீனாவின்
முனைப்பு காரணமாக புதிய ராஜதந்திர சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.