நிலாவில் நீர் இருப்பைக் கண்டறிய சீனாவின் புதிய திட்டம்
நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர் பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, 'சாங்கே-7' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகின்றது.
இந்த விண்கலம் வரும் ஓகஸ்ட் 24 முதல் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றுப்பாதை விண்கலம், தரையிறங்கி, ஊர்தி மற்றும் குதிக்கும் ரோபோ சாதனம் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டு இந்த ஆய்வுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் தொடர்பிலான தரவு
நிலவின் தென் துருவத்தில் உள்ள 21 கிலோமீட்டர் அகலமுடைய 'ஷேக்கிள்டன்' பள்ளத்தின் அருகே தரையிறங்கி, அங்குள்ள நீர் பனிக்கட்டியின் அளவு, தன்மை மற்றும் பயன்பாடு குறித்து இந்த மிஷன் ஆய்வு செய்யவுள்ளது.

நிலவில் மனிதர்கள் தங்குவதற்கும், குடிநீராகப் பயன்படுத்துவதற்கும், ஐதரசன் மூலம் ஏவுகணை எரிபொருள் தயாரிப்பதற்கும் இந்நீர் மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இந்தியாவின் 'சந்திரயான்-3' நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி நீர் தொடர்பிலான தரவுகளைச் சேகரித்திருந்த நிலையில், ரஷ்யாவின் 'லூனா-25' விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து மோதிச் சிதைந்தமை குறிப்பிடத்தக்கது.