இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள்
தேசிய இன விவகார ஆணையகத்திற்குப் பொறுப்பான சீன (China) அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, 2025 பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கையில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ விஜயம்
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். தமது ஒரு வார கால அதிகாரப்பூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அத்துடன், அமைச்சர் பான் தனது பயணத்தின் போது கண்டிக்கும் செல்ல உள்ளார். இதற்கிடையில், சீனா, இலங்கையின் வடக்கில் தொடர்ந்து அதிக வாழ்வாதார உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஸ_ யான்வே, இன்றும் நாளையும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்று அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2,470 உணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு, சீன அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வீட்டுவசதி அலகுகள், அரிசி மற்றும் கடற்றொழில் வலைகள் உள்ளிட்ட 1.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் சீனத் தூதர் குய் ஜென்ஹாங் வடக்கிற்கு விஜயம் செய்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் 12 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)