அமெரிக்கத் தடைகளை நிராகரித்த சீனா: ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் பாதுகாப்பு
ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கியதாகக் கூறி, சீனாவின் ஐந்து முன்னணி தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா விதித்த தடைகளைச் சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான தடைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், சீன நிறுவனங்களின் வணிக உரிமைகளைப் பாதிப்பதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (Hengli Petrochemical) உட்பட 'டீபாட்' (Teapot) என்று அழைக்கப்படும் ஐந்து சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான அமெரிக்கத் தடைகளைச் சீனா அங்கீகரிக்காது என்றும், அவற்றைச் சீன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் ஒரு "தடை உத்தரவை" சீனா பிறப்பித்துள்ளது.
தற்காப்பு நடவடிக்கை
அமெரிக்க நிதித்துறை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ஹெங்லி நிறுவனம் ஈரானின் மசகு எண்ணெயை வாங்குவதன் மூலம் அந்த நாட்டு இராணுவத்திற்குப் பல மில்லியன் டொலர் வருவாயை ஈட்டித் தருவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

ஆனால், ஐநா சபையின் அங்கீகாரம் இல்லாத இத்தகைய ஒருதலைப்பட்சமான தடைகளை, தொடர்ந்து எதிர்த்து வருவதாகச் சீனா கூறியுள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் கால் பகுதியை இந்தப் 'டீபாட்' நிலையங்கள் கொண்டுள்ளன.
ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளிடமிருந்து தள்ளுபடி விலையில் மசகு எண்ணெயைப் பெற்று இவை இயங்கி வருகின்றன. சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா தனது இறக்குமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்தை ஈரானிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்தத் தடைகள் சீன நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருட்களைச் சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்குக் கூடுதல் தடைகளை உருவாக்கியுள்ளன.
இருப்பினும், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கப்போவதாகச் சீனா அறிவித்துள்ளது.
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam