ஹூதி அமைப்பினரைக் கட்டுப்படுத்த ஈரானிடம் சீனா இரகசிய கோரிக்கை
யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா இரகசியமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈரான் விவகாரங்களை அறிந்த மூன்று உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியா விடுத்த அவசர வேண்டுகோளின் பேறாகவே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கப்பல் போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தல்
செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதிகளில் ஹூதி அமைப்பினர் வேகமான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.

இதன் காரணமாக சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையிலேயே சவூதி அரேபியா சீனாவின் உதவியை நாடியுள்ளது. சீனா பகிரங்கமாக அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்து வரும் போதிலும், ஈரானுக்கு அனுப்பிய தனியாத செய்தி மூலம் தனது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
செங்கடலிலும் தாக்குதல்கள் தொடர்ந்தால்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தனது எரிபொருள் தேவைகளுக்கு பெரிதும் நம்பியிருக்கும் கடல்சார் வர்த்தக வழிகளில் இந்த மோதல் பரவுவதைத் தடுக்கவே ஈரானின் செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது.

சீனாவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டுமெனில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனாவே கொள்முதல் செய்து வரும் நிலையில், ஈரானை வலியுறுத்தக்கூடிய ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கடலிலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை கடுமையாகப் பாதிக்கும் எனக் அஞ்சப்படுகிறது.