எச்சரிக்கையை மீறி தைவான் வந்த அமெரிக்க சபாநாயகர் - ஏவுகணை வீசி அச்சுறுத்திய சீனா
தமது எச்சரிக்கையை மீறி மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, தைவான் அருகே மிகப்பெரிய இராணுவ ஒத்திகையின் ஒரு பகுதியாக சீனா ஏவுகணைகளை ஏவியுள்ளது.
தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தைவான் தெரிவித்துள்ளது.
ஐந்து சீன ஏவுகணைகள் தமது கடற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் கூறியதுடன், பயிற்சிகளை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் மீதான அதன் இறையாண்மை உரிமைகோரல்களுக்கு ஒரு சவாலாக, அமெரிக்க நாடாளுமன்ற பேச்சாளர் பெலோசியின் வருகையை சீனா அடையாளப்படுத்தியுள்ளது.
ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா
சீனா தைவானை அதன் ஒரு பிரிந்த மாகாணமாக பார்க்கிறது, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் தைவான் கொண்டுவரப்படும் எனவும், தேவைப்பட்டால் பலவந்தமாக அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தாய்வானை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. எனினும் அந்த தீவுடன் ஒரு வலுவான உறவைப் பேணுகிறது. அத்துடன் தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களையும் அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது.
இதனிடையே, தமது தீவைச் சுற்றியுள்ள கடலில் ஏவுகணைகளை வீசுவதன் மூலம் சீனா, வடகொரியாவைப் பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, சீனாவின் இந்த நடவடிக்கை காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் விநியோகச் சங்கிலிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாய்வான் விமான நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
