கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை! சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களின் குழுவிற்கும் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த 13ஆம் திகதி வோசிங்டனில் நடைபெற்றுள்ளது.
இந்த இறையாண்மை பத்திரத்தை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை சுமார் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை அணிக்கு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் இந்த சந்திப்புக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அமர்வுகள்
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில் கடந்த 13ஆம் திகதி, சீனாவின் நிதியமைச்சர் லியு குன், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை தொடர விருப்பத்தை அறிவித்துள்ளார்.
எனினும் எப்போது இந்த பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்ற விடயம் இன்று வரை தெரியவரவில்லை.
நிதி வசதி
சீனாவின் அந்த அறிவிப்பு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை நிதி வசதியை பெறுவதற்கான வழியில் ஒருபடி முன்னேற்றத்தை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் வீரசிங்க மற்றும் செயலாளர் சிறிவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் கடன் வழங்குபவர்கள் எச்.பி.கே கெபிடல் முகாமைத்துவம் மற்ற தனியார் இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் என பலரும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.