ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்காத சீனா!
நீண்டகால ரஷ்ய நட்பு நாடான சீனா இன்னும் உக்ரைனில் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யாவை கண்டிக்க மறுத்து வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையை "படையெடுப்பு" என்று அழைக்க சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒரு செய்தி மாநாட்டில், சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், உரையாற்றும்போது, சீனா, அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கும் அதே வேளையில், "பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யாவின் நியாயமான கவலைகளையும்" புரிந்துகொள்கிறது என்று குறிப்பிட்டார்.
சீனா இன்னும் உக்ரைனை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரித்து வருகிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கான கதவு உக்ரைனில் இன்னும் மூடப்படவில்லை என்றும் நம்புவதாகவும், ஆனால் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய
சுயமாக அறிவிக்கப்பட்ட பிரிந்து சென்ற குடியரசுகளை சீன அரசாங்கம்
அங்கீகரிக்குமா இல்லையா என்பதையும் அவர் கூறவில்லை.