குழந்தைகள் உட்பட 10 பேர் பலி! சீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்
சீனாவில் அண்மை நாட்களாக கோவிட் வைரஸ் பரவல் மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பாரிய தீ விபத்து
இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.
சீனாவின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழுமையான ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையே, ஊரடங்கு நடைமுறையில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24ஆம் திகதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், சீன அரசு விதித்துள்ள கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீன அரசாங்கத்திற்கு எதிராக திரண்ட மக்கள்
உரும்யூ நகரில் நேற்று முன்தினம் திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கோஷமிட்டனர்.
அதோடு நாட்டில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து 3வது ஆண்டாக கொரோனா பரவல் என்பது உள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பு ஏற்று உடனடியாக அதிபர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து வீரியமடைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.