ரஷ்ய வீரர்களுக்கு சீனா இரகசியப் பயிற்சி: சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு
உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதற்காக ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு சீனா ரகசியமாகப் பயிற்சி அளித்தது என்ற சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸின் அறிக்கையை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
கடந்த 2025 ஜூலை மாதம் ரஷ்யா மற்றும் சீனா இடையே கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, சுமார் 200 ரஷ்ய வீரர்கள் பெய்ஜிங் மற்றும் நான்ஜிங் ஆகிய சீன நகரங்களில் உள்ள இராணுவ மையங்களில் இரகசியப் பயிற்சி பெற்றதாகவும், அவர்களில் சிலர் உக்ரைன் போர்க்களத்தில் சண்டையிட்டு வருவதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ரஷ்யாவில் பயிற்சி
மேலும், இதே ஒப்பந்தத்தின் கீழ் நூற்றுக்கணக்கான சீன வீரர்களும் ரஷ்யாவில் பயிற்சி பெறவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை முற்றிலும் மறுத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்களால் இது போன்ற ஏராளமான பொய்த் தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
பெரும் பரபரப்பு
நாம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. எனவே, இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் தான் நடுநிலை வகிப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த ஒரு தூதராகச் செயல்பட விரும்புவதாகவும் சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தச் சூழலில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் இந்த வாரம் சீனாவில் சந்தித்துப் பேசி வரும் வேளையில், ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை வெளியாகி சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.