இந்தியாவில் மீண்டும் சாலை அமைக்கும் சீனா
காஸ்மீரின் சியாச்சின் (Kashmir Siachen) பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனாவால் சாலை ஒன்று அமைக்கப்படுதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைப்பில் ஈடுபட்டு வருகின்றமையை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பாதை அமைப்பானது இந்தியாவுக்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்
ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தினால் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, இந்த பாதை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இநதநிலையில் கார்கில், சியாச்சின் பனிப்பாறை, கிழக்கு லடாக் ஆகிய இடங்களுக்குப் பொறுப்பான இந்திய இராணுவத்தின் தீயணைப்பு மற்றும் கோப்ஸ் படையின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகேஸ் சர்மா (Rakesh Sharma) “இந்தச் சாலை முற்றிலும் சட்டவிரோதமானது. இதற்கு இராஜதந்திர ரீதியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும், வரலாற்று ரீதியாக காஸ்மீரின் இந்த பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படுகிறது.
ஜம்மு -காஸ்மீரின் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பின் மத்திய அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்திலும் இந்தப்பகுதி இந்தியப் பிரதேசமாகக் காட்டப்படுகிறது.
இறையாண்மை
சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்த பிரதேசம் 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு, 1963இல் கையெழுத்தான இருதரப்பு எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், இது இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரின் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகும் என்று இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்ட காலமாக வாதாடி வந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |