யாழ்ப்பாணத்தின் ஊடாக இந்தியாவை நெருங்கும் சீனா! வலுக்கும் பனிப்போர்
இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் தேவை இருப்பதன் காரணமாக, சீனா அதன் தேவைகளை இந்தியாவை நோக்கி நகர்த்த வேண்டியிருப்பதாக அமெரிக்கா சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்தியாவை நோக்கி தன்னுடைய நலன்களை நகர்த்துவதற்கு சீனாவிற்கு அக்கறை காணப்படுகின்றது. இந்த போட்டியை நீண்ட காலத்திற்கு கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
தென்னிலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் போது, இயல்பாகவே வடக்கு கிழக்கில் இந்தியாவின் ஆதிக்கம் காணப்படும். அந்த செயற்பாட்டை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீனா இருக்கின்றது.
இதனால் இந்தியாவை நோக்கி தனது நலன்களை சீனா நகர்த்துகின்றது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாட்டில் சீனா ஈடுபட்டுள்ளது.
முழு இலங்கையும் சீனாவின் செல்வாக்கின் கீழ் வருகின்ற போது அது தொடர்பில் இந்தியாவிற்கு ஒரு பாரதூரமான பிரச்சினை ஏற்படும்” என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண தீபகற்பத்தில் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டத்திற்கு சீனா இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி, நைனாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் சீனாவில் சினோசோர்-எடெக்வின் கூட்டு முயற்சியை ஈடுபடுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை கடந்த 18ம் திகதி ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.
இந்த திட்டத் தளம் இந்திய கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதும், டெல்ஃப்ட் தீவு வடக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



