சீனாவில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்: மூன்றாவது முறையாக அதிபராகிறாரா ஜி ஜின்பிங்!
சீனாவில் 5 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய காங்கிரஸ் முக்கிய பொதுக் கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றது.
இதனை அதிபரும் கட்சியில் தலைவருமான ஜி ஜின்பிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஜி ஜின்பிங்
அதிபர் ஜி ஜின்பிங்கில் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் மூன்றாம் முறையும் அவரே ஆட்சியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போது கூட்டம் கூடியுள்ளது.
குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
மேலும் அவர் கடைப்பிடித்து வரும் கோவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒருபுறம் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங்கே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு
இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது.
ஒரு வாரத்திற்கு இக்கூட்டம் நடைபெறும். இந்த மாநாட்டில் 2,300 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இம் மாநாட்டில் உரையாற்றிய ஜி ஜின்பிங், ``ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது.
அதேபோல், தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது.
தைவான் பிரச்சினையில் சீன மக்கள்தான் தீர்வு காண வேண்டும். சீன அரசாங்கம் ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது. தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம்.
சீனாவின் ஜீரோ கோவிட் நிலைப்பாடு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மக்களும், அவர்களின் உயிரும் நலனும்தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. அதனால் ஜீரோ கோவிட் உத்தி மூலம் சீனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் உடல்நலனை சிறப்பாக பேணியது. உலகத்தரம் வாய்ந்த இராணுவத்தைக் கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தும்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் சீனப் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் சீனா பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி ஒரு நவீன சோஷலிச சக்தியை கட்டமைக்க பாடுபடும்" என்றார்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடக்கும் போது அக்கட்சியின் புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். தற்போது ஜி ஜின்பிங்தான் கட்சியின் பொதுச்செயலராகவும் உள்ளார். சீனாவில் அதிபர் பொறுப்பைவிடவும் கட்சியின் பொதுச்செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மூன்றாவது முறையாக சீன அதிபர்
முன்னதாக நடைபெற்றுவரும் தேசிய மாநாட்டில் மீண்டும் ஜி ஜின்பிங்கே பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்றும், அதனடிப்படையில் அடுத்த ஆண்டு, மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒருபுறம் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் மூன்றாவது முறையாக சீன அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் சீனாவில் நடப்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.