ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை! பெற்றோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (1) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) பெற்றெடுத்திருந்தனர்.
விளக்கமறியல்
இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்.
உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார்.
கைது
இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது.
இந்தப் பின்னணியில் தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



