பாடசாலை மாணவர்களை மின்சாரம் பாய்ச்சி மிரட்டிய பொலிஸார்! கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
களுத்துறை - மில்லனிய பகுதியில் பாடசாலை மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரை நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடசாலை ஆசிரியர் மற்றும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. களுத்துறை பகுதியில் பாடசாலையொன்றில் தரம் 5 மாணவர்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவரிடமிருந்து பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மின்சாரம் பாய்ச்சி மாணவர்களை மிரட்டிய பொலிஸார்
குறித்த மாணவர்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் பையிலிருந்து பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு பாடசாலை ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டதுடன், மாணவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸ் வாகனத்துக்குள் மின்சாரம் பாய்ச்சி மாணவர்களை பொலிஸார் மிரட்டி அழைத்துச்சென்று மீண்டும் பாடசாலையில் இறக்கி விட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமையை உள்ளூர் நீதி வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ந்து இலங்கை சட்டத்தின்படி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செய்யும் எந்தத் தவறையும் குற்றமாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு இன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
May you like this Video




