சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் இடைநீக்கம்
பாலியல் முறைகேடு முறைப்பாடுகளுக்கு ஆளாகியுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், பிரித்தானியாவின் வழக்கறிஞர்களுக்கான சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பான 'பார் ஸ்டாண்டர்ட்ஸ் போர்டு' மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
56 வயதான கரீம் கான், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து வருவதுடன், தாம் எப்போதும் தொழில்முறை விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி முடிவு வாக்கெடுப்பு மூலம்
முன்னதாக, ஜூன் 8ஆம் திகதி ஐசிசி-யின் (ICC) நிர்வாகக் குழுவும் இவரை இடைநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது பிரிட்டிஷ் அமைப்பும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த தற்காலிக நீக்கம் குறித்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் ஒரு குழு விசாரணை நடத்தி மறுபரிசீலனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக கரீம் கான் பிடியாணை பிறப்பித்ததால், அவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், இளம் பெண் அதிகாரி ஒருவருடன் கரீம் கான் கட்டாயப் பாலியல் உறவு வைத்திருந்தார் என்ற முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட 18 மாத கால ஐக்கிய நாடுகள் சபையின் (UN) இரகசிய விசாரணையில், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எதிர்வரும் ஜூலை 24 அன்று நடைபெறும் ஐசிசி உறுப்பு நாடுகளின் சிறப்பு கூட்டத்தில் அவரது எதிர்காலம் குறித்து இறுதி முடிவு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட உள்ளது.