செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..!
தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தமது பொது எதிரியான சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு மட்டும் போராட வேண்டியவர்கள் இன்று பொது எதிரியோடு மாத்திரமல்ல தம்மால் தெரிவு செய்யப்பட்ட, தமக்காக போராடுவார்கள் என்று நம்பியிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய ஒரு துப்பாக்கிய நிலை தோன்றி விட்டது.
இன்று தமிழ் அரசியல் களத்தில் நஞ்சை மருந்தாகவும், கொலையாளியே வைத்தியனாகவும், குற்றவாளியே நீதிபதியாகவும் தமிழ அரசியல் பரப்பில் கொலோச்சுகின்றனர்.
இத்தகைய சூழமைவில் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களும் பல வகைப்பட்ட பரிமாணங்களில் எங்கும், எதிலும் வெடிக்கலாம். இத்தகைய நிகழ்போக்கினை சாதாரணமாக கலந்து சென்று விட முடியாது. இதுதான் மக்களின் ஜனநாயக உரிமையும் ஜனநாயக செயல்முறையும் என்பதை மறுத்துவிடவும் முடியாது.
கடந்த வாரம் 23 ஜூன் திங்கட்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் அணையா விளக்கு போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டம் எந்தவித கட்சி பேதங்களும் இன்றி தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட நீதியை கோரிய போராட்டமாக அமைந்திருந்தது.
மனித உரிமை ஆணையாளர்
இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் (United Nations High Commissioner for Human Rights) வோல்கர் ரயுக் (Volker Türk) இலங்கைக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவருடைய பயணத்தின் போது யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்திருந்தார்.
அவ்வாறு வருகின்ற போது தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதி கோரி மேற்கொண்ட அணையா விளக்கு போராட்ட களத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது இங்கே முக்கியமானது.
அணையா விளக்கு போராட்டத்தையும் அங்கு கூடுகின்ற மக்களின் அளவினை கருத்தில் கொண்டு சுயநல அரசியல்வாதிகள் அந்தப் போராட்டத்தை அவரவர் தம்பக்கம் திருப்ப, தமக்கு ஆதரவு தளத்தைத் தேட ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க முனைந்தமையால் அரசியல்வாதிகளுக்கு எதிராக அந்த இடத்திலும் மக்கள் கோஷங்களை எழுப்பியபோது போராட்டம் இன்னொரு வகையை தொட்டுவிட்டது என்பதும் உண்மைதான்.
அணையா விளக்கு போராட்டம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்கள் விருப்புக்கு மாறாக நடந்தால் உங்களுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும் என்ற ஒரு புதிய செய்தியை சொல்லி இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்வில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்து தொடர்ந்து வந்த 30 ஆண்டுகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்திலும், சிங்கள தலைவருடனும் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், பேச்சுக்கள் எதுவும் பயனில்லாத நிலையிலேயே ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்ட வழிமுறையாக ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.
ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய காலத்தில் மிதவாத அரசியல் தலைமைகளின் ஏமாற்றுக்களும், பொய்யான போராட்டங்களும் தமிழ் மக்களை அவர்கள் தொடர்ந்து ஏமாற்றியதையும் பொறுக்க முடியாமல்த்தான் 1980 ஆரம்பத்தில் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முத ற் தடவையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
நல்லூர் வீரகாளியம்மன் கோயில்
தமிழ அரசியல் தலைவர்களுக்கு எதிராக தமிழ் மக்கள் போராடுவார்கள் என்பதை அந்த முதலாவது கொடும்பாவி எரிப்புத்தான் கட்டியம் கூறியது. அதற்குப் பின்னர் மாவட்ட சபை தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற தமிழ அரசியல் பிரமுகர்களை முற்றுகையிடுதல், பிரசாரக் கூட்டங்களை குழப்புதல், வழிபயணங்களின் போது வழிமறித்து திருப்பி அனுப்புதல் போன்ற போராட்ட வடிவங்கள் பல வகைகளில் தமிழ் அரசியல் தலைமைகள் என்று சொல்லப்படுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதை இன்றைய காலகட்டத்தில் இங்கே ஞாபகப்படுத்த வேண்டும்.
அவ்வாறுதான் இறுதியாக 24-07-1984 அன்று நல்லூர் வீரகாளியம்மன் கோயில் முன்றலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பாசாங்கிற்கான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அரங்கேற்றினர்.
இந்தப் பாசாங்கு அரசியலை புரிந்து கொண்ட போராட்ட இயக்கங்கள் இவர்களுக்கு எதிராக அந்த உண்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்களை பயன்படுத்தி வீரகாளியம்மன் கோவிலை முற்றுகையிட்டு பாசாங்கு உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்த தமிழ் தலைவர்களுக்கு பலவந்தமாக உணவை ஊட்டி அந்தப் போராட்டத்தை விரட்டியடித்தனர்.
இவ்வாறு அவர்கள் ஜனநாயக முறையில் போராடுவதை ஏன் தடுத்தார்கள் என்பதற்கு சுவாரசியமான ஒரு உண்மை உண்டு. 1983 ஆம் ஆண்டு ஜூலை படுகொலையுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்தியாவுக்கு சென்று தமிழகத்தில் தங்கினர்.
தமிழக அரசின் இலவச வீடுகளைப் பெற்று காலத்தைக் கழிக்கும் நாட்களில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது இந்திரா காந்தி அம்மையார் “களத்தில் நீங்கள் போராடாமல் இங்கு இருப்பதனால் உங்கள் தரப்பிற்காக நாங்கள் எதையும் பேச முடியாது.
போராட்டத்தின் தலைமையை களத்தில் நின்று போராடும் சக்திகளே பெற்றுவிடுவர் நீங்கள் இங்கே இருக்கதனால் அங்கே போராடும் போராட்ட இயக்கங்கள் தலைமைத்துவத்தை பெற்றுவிடும் அல்லவா?“ என்ற ஒரு கேள்வியை அமுதலிங்கம் மீது கொடுத்தாரம்.
ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி
அவருடைய கேள்வியில் தொக்கு நின்ற விடயங்களைப் புரிந்து கொண்ட அமிர்தலிங்கம் உடனடியாக தமது பரிவாரங்களுடன் நாடு திரும்பி தாமும் போராட்ட களத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வீரகாளியம்மன் கோவிலில் ஒரு பாசாங்கு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
இந்தப் பாசாங்கு அரசியலை புரிந்து கொண்ட விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இவர்களை அம்பலப்படுத்தவும் களத்தில் இருந்து அகற்றுவதற்கும் யாழ்ப பல்கலைக்கழக மற்றும் யாழ் இந்துக் கல்லூரி யார் மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்களைக் கொண்டு இவர்களுடைய போராட்டத்தை விரட்டி அடித்தார்கள்.
ஆயினும் இந்தச் சம்பவத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுதந்திரன் பத்திரிகை "இளைஞர்களின் வீர ஆவேச கேள்விகளுக்கு சிவா துணிந்து பதிலளித்தார்" என்று தலைப்புச் செய்தியை வெளியிட்டு தமது போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது போல ஒரு போக்கை காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட வேண்டும்.
அச்சு ஊடகங்களில் தாங்கள் சரியாக நடக்கிறோம் என்பதை வெளிகாட்டக் கூடிய வகையில் அச்சு ஊடகங்களை அன்றைய காலத்தில் இவர்கள் தங்கள் கையில் வைத்திருந்தமை மேற்படி செய்தியின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதுவே அவர்களுடைய அரசியல் சாணக்கியமாகவும் அன்று இருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சி இவர்களை எங்கோ ஒரு மூலையில் ஒதுக்கி விட்டுவிட்டது.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தமிழ் தேசியத்தின் இருப்பிற்காகவும் எப்போதும் போராடத் தயாராகவே உள்ளார்கள். மிதவாத அரசியல் தலைமைகளின் சாத்வீகப் போராட்டங்களுக்கு எவ்வாறு பங்களித்தார்களோ அவ்வாறே ஆயுதப் போராட்டம் முன்னெழுந்தபோது அந்த ஆயுதப் போராட்டத்திற்காக தம்மாளான அனைத்தையும் அர்ப்பணித்தார்கள்.
சாரை சாரையாக தம் உயிர்களை இனத்திற்காக தாரை வார்த்தார்கள். இவ்வாறு தமிழ் மக்கள் எப்போதும் போராடியவர்களின் பின்னே அணிவகுத்தார்கள். விடுதலைக்கு போராடுகின்ற தமிழினம் போராடுபவன் பக்கம் எப்போதும் நிற்கும் மனப்பாங்கு உள்ளவர்கள்.
இத்தகைய மக்களை சரியாக வழி நடத்தினால் பிரம்மாண்டமான சக்தியை மக்கள் வெளிப்படுத்துவர். மாறாக தம்கால் போனபோக்கில் போகும் தான்தோன்றித் தலைமைகளை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டவும் தயங்க மாட்டார்கள். இதனை அணையா விளக்கு போராட்டத்தின் போது சிங்கள அரசுடனும், அரச ஒத்தோடிகளுடனும் கூட்டு சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் துரத்தி அடித்து இருக்கிறார்கள்.
முற்றுகையிட்டு போராட்டம்..
இதுபோன்ற தமிழ் மக்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மேலும் தொடரும் என்பதற்கான கட்டியமாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களை சீரழித்துக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய காலம் கனிந்து வருகிறது.
பெரும் பலத்தோடு இருந்த கோத்தபாய ராஜபக்சவை அரகலையப் போராட்டத்தில் பங்குபற்றிய வெறும் 5000 மக்களினால் துரத்தி அடிக்க முடியுமாக இருந்தால் இன்று தமிழ் மக்களின் அரசியலை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற, அழிவுப்பாதைக்கு தமிழர்களை இழுத்துச்செல்ல முனைந்து கொண்டிருக்கின்ற போலி அரசியல் தலைமைகளை துரத்துவதற்கு தமிழ் மக்களில் ஒரு 500 பேர் திரண்டாலே போதும்.
இவர்களுடைய வருகையையும், இவர்களுடைய வீடு வாசல்களையும், அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே தமிழ் தலைமைகளை எனப்படுவோர் ஒன்றில் திருந்துவார்கள். அல்லது களத்தில் இருந்து அகன்று செல்வார்கள். போராடினால் மாத்திரமே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை வரலாறு தொடர்ந்து நிரூபித்துள்ளது.
போராட்டம் என்பது சட்டத்துக்கு உட்பட்டது என பலரும் போராட்டம் பற்றி வியாக்கியானங்கள் முன்வைக்கிறார்கள். சட்டத்துக்கு கட்டு நடத்தப்படுவது போராட்டம் அல்ல விண்ணப்பம், கோரிக்கை என்றுதான் அதனைச் சொல்ல வேண்டும். ஒடுக்குமுறையாளன் வைத்திருக்கின்ற சட்டத்துக்கு எதிராக அதனை மீறி செயற்படுவதுதான் போராட்டம்.
மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காக மனித உரிமைகளை மதித்து, அந்த உரிமைகளை தாமும் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுவதுதான் போராட்டம். மாறாக ஒடுக்கு முறையாளனிடம் விண்ணப்பிப்பதும், கோரிக்கை விடுவதும் போராட்டமல்ல பிச்சை எடுப்ப என்றுதான் செல்லப்டுகிறது. வெறுமனே கூக்குரலிட்டு பேசுவது எந்தப் பயனையும் தராது.
இதனைத்தான் மிதவாத அரசியல் தலைமைகள் நாடாளுமன்ற அரசியலில் மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது தமிழ் மக்கள் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே போராட்டத்தை கொண்டு வருவது அவசியமானது. நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடினால் மட்டுமே தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற முடியும். "ஒடுக்கு முறையாளர் ஒடுக்கப்படுபவன் மீது மேற்கொள்கின்ற வன்முறைக்கும், ஒடுக்கப்படுபவன் கொடுக்கு முறையிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒடுக்குமுறையாளனுக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறையையும் சமப்படுத்த முடியாது.
அதனை ஒரே தராசில் வைத்து பார்க்கவும்கூடாது. இந்த அடிப்படையில்தான் இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தமிழினமும் தம்மை தற்காப்பதற்காக தமது பொது எதிரிக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறையை வன்முறையாகக் கணிக்க முடியாது. அதனை தற்காப்புக்கான போராட்டம் என்றுதான் மானிட உரிமை கோட்பாட்டாளர் வரையறை செய்கின்றனர்.
அவ்வாறுதான் ஜனநாயக ரீதியாக தம்மால் வாக்களிக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்தவர்கள் மக்களுடைய விருப்புக்கு மாறாக செயல்படுகின்ற போது அவர்களுக்கு எதிராக மக்கள் மேற்கொள்கின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் போராட்டங்கள் என்று வரையறைக்குள்ளயே அடக்கப்படுகின்றது. இது மக்களுடைய ஜனநாயக உரிமையும், ஜனநாயகச் செயல்முறையுமாகும்.
சுவிஸ்லாந்து நாடாளுமன்ற முறை
அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் ஜனநாயகம் தழுவிய எழுச்சி போராட்டங்களின் மூலமே மக்கள் பிரதிநிதிகள் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியும். புள்ளடி போடும் ஜனநாயகம் என்பது தேர்தலில் புள்ளடி போட்டவுடன் முடிவடைந்து விடுவதல்ல.
புள்ளடியிட்டு வாக்களித்ததன் மூலம் குறிப்பிட்ட பிரதிநிதிக்கு மக்கள் வழங்கிய ஆணையை அந்தக் கால வரையறைக்குள் அவர்கள் ஆற்றத்தவறின் அவர்களை எதிர்த்து கேள்விகேட்கின்ற ஆற்றலும், வல்லமையும் வாக்களித்த மக்களுக்கு உண்டு.
மக்களின் விருப்புக்கு மாறானவர்களை திருப்பி அழைக்கின்ற முறைமை சுவிஸ்லாந்து நாடாளுமன்ற முறையில் உண்டு. இலங்கையில் அத்தகைய ஒரு முறை இருக்குமானால் இன்று இலங்கையின் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்திருப்பர்.
இந்த நடைமுறை இல்லாமையின் வெளிப்பாடுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளும் எப்போது மக்கள் முன் வருகிறார்களோ அந்த இடத்தில் அவர்கள் அவர்களுக்கான எதிர்ப்பு போராட்டங்களை மக்கள் எந்த வடிவிலும் மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு மேற்கொள்வது என்பது மக்கள் பிரதிநிதிகள் தாம்போன போக்கில் போகாமல் மக்களின் விருப்புக்கு ஏற்ற வகையில் நமது அரசியலை மேற்கொள்ள வைப்பதற்கான நிற்பந்தமாகவும், நிபந்தனையாகவும் அமைய முடியும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் 69 லட்சம் சிங்கள மக்களின் வாக்கை பெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்சேவை சிங்கள மக்களின் உரிமைகள் மீதும், அவர்களுடைய நலன்களின் மீதும் கைவைத்ததன் விளைவு வெறும் ஐயாயிரத்துக்கு உட்பட்ட மக்கள் காலிமுகத்துடலில் திரண்டு அறகலையா என்ற போராட்டத்தை நடத்தியதன் விளைவு பெரும் படை பட்டாளங்களோடு இருந்த கோத்தபாய இரகசியமாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டது.
அவ்வாறே அன்மையில் பெரும் ஆதரவோடு பதவிக்கு வந்த பங்களாதேஷின் ஜனாதிபதி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடுத்து நாட்டை விட்டு தப்பி ஓடி இன்று சர்வதேச நீதிமன்றத்தில் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனையை பெற்றிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் செல்ல வேண்டும்.
ஆகவே மக்கள் குறிப்பிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மக்கள் பிரதிகளுக்கு எதிராகவோ கோஷமிடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள், குழப்பங்களை விளைவிக்கின்றார்கள் என்றால் அது மக்களுடைய தவறு கிடையாது. அது குறிப்பிட்ட மக்கள் பிரதியினுடைய தவறு. அவர்கள் மக்களுடைய விருப்புக்கு மாறாக செயல்படுகிறார்கள் என்பதற்காகவே தான் நடத்தப்படுகிறது.
இலங்கை அரசியல் யாப்புக்குள் இவ்வாறுதான் மக்கள் வழிதவறி போகும் மக்கள் பிரதிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே மக்கள் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை இத்தகைய சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவார்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
இவ்வாறு மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு எதிராகவோ அல்லது அரசியல்வாதிக்கு எதிராகவோ கோஷமிடுகிறார்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறார்கள் என்றால் அது உயர்ந்த ஜனநாயக விழுமியங்களின் அம்சமாகவே பார்க்கப்பட வேண்டும். மாறாக அதனை குழப்பங்கள் என்று கொச்சைப்படுத்துவது ஜனநாயக விரோதச் செயல்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 12 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.